ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பணய கைதிகள் விடுதலை!

Saturday, November 25th, 2023

ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தததையடுத்து இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் -ஹமாஸ் போர் கடந்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமானது. இதில் இதுவரையில் 13 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.

மேலும் நான்கு நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பிணைக்கைதிகளில் 50 பேர் விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று தாய்லாந்தை சேர்ந்த 12 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் என முதல்கட்டமாக 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.

அதேவேளை இஸ்ரேல் சிறையில் உள்ள 39 பேரை இஸ்ரேல் விடுதலை செய்தது. இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தி கைதான 25 பெண்களும், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 14 ஆண்களுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலையான பாலஸ்தீனியர்களை பார்த்த உறவினர்கள் வான வேடிக்கைகளை வெடித்தும், ஆனந்த கண்ணீருடனும் உற்சாகமாக வரவேற்றனர்.

இஸ்ரேல் சிறையில் இருந்து மொத்தம் 150 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர். 250 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யும்போது சுமார் ஆயிரம் பேர் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என அறியமுடிகிறது.

இதேவேளை, “ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்து, பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காஸாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. இது போர் நிறுத்தம் இல்லை, பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே.

இஸ்ரேலுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்க மீண்டும் போர் தொடங்கும்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இஸ்ரேலுக்கான விமானச் செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று எமிரேட்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேலின் தற்போதைய இராணுவ நிலைமை காரணமாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து விமானங்கள் திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி இயங்கவில்லை.

எனவே மறு அறிவிப்பு வரும்வரை விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: