ஸ்லோவேகியா பிரதமர் இராஜினாமா!

Friday, March 16th, 2018

ஸ்லோவேகியாவில் ஒரு செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்லோவேகியா நாட்டில் பிரதமரின் ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் ஒருவர் சமீபத்தில் தனது காதலியுடன் படுகொலை செய்யப்பட்டார். பிரதமரின் ஊழல் குறித்து செய்தி வெளியிட்டதாலேயே அந்த செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த மக்கள், பிரதமர் ராப்ர்ட் பிகோவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக நீடித்த போராட்டத்தால் பிரதமர் ராபர்ட் பிகோ, தனது பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதையடுத்து, அதிபர் ஆண்ட்ரேஜ் கிஸ்காவின் அறிவுறுத்தலின்படி தனது பதவியை பிரதமர் ராபர்ட் பிகோ இராஜினாமா செய்தார். அவரது இராஜினாமா கடிதத்தை அதிபர் ஆண்ட்ரேஜ் கிஸ்கா ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் இராஜினாமாவால் பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இராஜினாமா செய்துள்ளதையடுத்து புதிய அரசை அமைக்குமாறு துணைப் பிரதமருக்கு அதிபர் ஆண்ட்ரேஜ் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச செயதொகள் தெரிவிக்கின்றன.

Related posts: