ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு முக்கிய வல்லரசுகள் பங்காற்றும்!

Friday, June 8th, 2018

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்றும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
சீனாவின் குயின்டோ நகரில் எதிர்வரும் 9, 10-ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. அந்த அமைப்பில் ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ரஷிய அதிபர் சீன தேசிய செய்தித் தொலைக்காட்சிக்கு கூறியதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளில்தான் உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 43 சதவீதம் உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்த நாடுகளில்தான் 23 சதவீதம் உள்ளது. சர்வதேச அளவில் ரஷியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகின்றன. எனவே, இந்த மாநாட்டிலும் இந்த மூன்று நாடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ரஷியாவும், இந்தியாவும் மிக நீண்டகாலமாக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. முக்கிய ராணுவ தளபாட கொள்முதலில் ரஷியாவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதை இந்த உலகமே அறியும்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், இரு நாடுகளும் இப்போது பரஸ்பரம் மிகவும் புரிதலுடன் நடந்து வருகின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இடம் பெற்றுள்ளதன் மூலம் சீனாவுடனான இந்திய உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்றார்.
அமெரிக்காவுக்கு ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இப்போது நட்புறவு சிறப்பாக இல்லை. சீனாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபட்டதால் அந்நாடு அதிருப்தியில் உள்ளது. அதேபோல சிரியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்களால் ரஷியாவுக்கும், அமெரிக்காவும் இடையே இப்போது மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஷிய அதிபர் புதின் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, புதினை சந்தித்துப் பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: