வெற்றுப்பேச்சு முடிவுக்கு வந்துள்ளது:நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது – ட்ரம்ப்

Saturday, January 21st, 2017

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவின் நலனே தனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்ட கொண்ட பின்னர் ட்ரம்ப் தனது முதலாவது உத்தியோகபூர்வ உரையை நிகழ்த்தினார்.

டொனாலட் ட்ரம்ப் தனது உரையில் “அமெரிக்கர்கள் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும், நீங்கள் மீண்டும் ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டீர்கள். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன்.

அமெரிக்காதான் எனது முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணம் உங்களுடையது. இது உங்களுக்கானது. இங்கு கூடியுள்ள அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்கர்களுக்குமானது இந்த தருணம்.

வொஷிங்டனில் மக்களுக்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்படும். இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன் ஆட்சி நடைபெறும். வர்த்தகம், வரி விதிப்பு, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் போன்ற அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களின் நலன்களுக்கானதாகவே அமையும்.

உங்களுக்காக என் உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஒருபோதும் அமெரிக்க மக்களை கைவிடமாட்டேன். மக்களுக்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசியல்வாதிகளைப் பற்றி ஒருபோதும் நாம் பேசுவதில்லை. இந்த முறை வெற்றுப்பேச்சு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது“ எனக் குறிப்பிட்டார்.

Donald-Trump-Jon-720x480