விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை  – மத்திய அரசு தகவல்!

Saturday, August 13th, 2016

தாம்பரத்தில் இருந்து சென்றபோது மாயமான விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

சென்னை அருகே உள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த மாதம் 22–ந்தேதி காலையில் விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 6 பணியாளர்கள் உள்பட 29 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே சென்ற போது திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள், படகுகள், கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல், பல்வேறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என பெரும் படையே ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தை நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை எழுப்பினார். அப்போது பேசிய அவர், மாயமான விமானத்தின் பாகங்கள் கிடைக்கும் வரை தேடுதல் பணியை நிறுத்தக்கூடாது என அரசை வலியுறுத்தினார்.இதற்கு ராணுவ இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே பதிலளித்து கூறியதாவது:–

மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல்படை மற்றும் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏராளமான விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் ஆழ்கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் எதுவும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு வர்த்தக கப்பல்களுக்கும், மீனவ சமூகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த சுமார் 30 பொருட்களை சேகரித்து ஆய்வு செய்தோம். எனினும் விமானம் தொடர்பாக உறுதியான தடயம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. விமானம் மாயமாகி பல நாட்கள் ஆகியுள்ளதால், அதில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை.

கடலில் மாயமாகும் விமானங்களை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. எனினும் விமானப்படை விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு மந்திரி சுபாஷ் பாம்ரே கூறினார்.