விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமானத்தில் இருந்து அபாய சமிக்ஞை!

Friday, December 9th, 2016

பாகிஸ்தானில் 48 பேர் பலியான விமான விபத்தில் விமானம் தொடர்பை இழக்கும் முன் விமானி அபாய சமிக்ஞை வெளியிட்டிருப்பதாக விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் என்ஜின் கோளாறு இருப்பதாகவும் விமான கட்டுப்பாட்டு அறையிடம் அந்த விமானி குறிப்பிட்டுள்ளார். சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்று கொண்டிருந்த பிகே-661 என்ற விமானம் கடந்த புதன்கிழமை நாட்டின் வடக்கு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 48 பேரும் கொல்லப்பட்டனர்.

எனினும் விமானம் பறப்பதற்கு முன் தீவிர சோதனைக்கு உள்ளான நிலையில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. “சிறப்பாக செயற்படும் விமானம் என்பதை தெளிவாக குறிப்பிட முடியும். தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று பாகிஸ்தான் விமான சேவைகள் தலைவர் அஸாம் செய்கோல் தெரிவித்தார்.

விமானத்தில் கறுப்புப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் வெளியாகி இருக்கும் இன்ஜின் பிரச்சினை குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று பாகிஸ்தான் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

“வலதுபுற இன்ஜின் செயலிழப்புக்கு அப்பால் விமானம் மோதுவதற்கு வேறு எந்த காரணமும் தற்போதைய நிலையில் தெரியவில்லை” என்று பாகிஸ்தான் சிவில் விமானப்போக்குவரத்து நிர்வாகத்தின் இர்பான் எலாஹி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கைபர் பஷ்துன்வா மாகாணத்தின் ஹவெலியான் பிரதேசத்திலேயே விமானம் விழுந்துள்ளது.

கருகிய நிலையில் இருக்கும் பயணிகளின் சடலங்கள் அடையாளம் காண மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரபல பொப்பிசை பாடகராக இருந்து இஸ்லாமிய போதகராக மாறிய ஜுனைத் ஜம்ஷட்டும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

coltkn-12-09-fr-04161909146_5080259_08122016_mss_cmy

Related posts: