விண்வெளி ராக்கெட்டில் திடீர் கோளாறு: அமெரிக்க, ரஷிய ஆய்வாளர்கள் பத்திரமாக மீட்பு!

Friday, October 12th, 2018

அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ராக்கெட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதிலிருந்த இரு விண்வெளி வீரர்களும் காயமின்றி மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா ஆகியவை வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

ரஷிய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினையும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக்லாஸ் ஹேகையும் ஏற்றிக் கொண்டு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி சோயெஸ் ராக்கெட் கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலியே அந்த ராக்கெட்டின் இரண்டாவது கட்ட என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த ராக்கெட்டிலிருந்த விண்வெளி ஓடம் தனியாகப் பிரிந்து பூமியை நோக்கி பாயத் தொடங்கியது. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவே தரையை நோக்கி அது பாய்ந்ததால் அதிலிருந்த இரு விண்வெளி வீரர்களும் அளவுக்கு அதிகமான புவியீர்ப்பு எதிர்விசையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

எனினும், இதுபோன்ற சூழல்களுக்காக அவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததால் அந்த விசையை அவர்களால் சமாளிக்க முடிந்தது.

மேலும், பூமியில் தயாராக இருந்த மீட்புக் குழுவினருடன் தொடர்பு கொண்டு அவர்களால் பேச முடிந்தது.

இதையடுத்து, அவசரமாக தரையிறங்கிய அந்த ராக்கெட்டில் இருந்து இரு விண்வெளி வீரர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட இருவரும் காயமன்றி, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

இதன் மூலம், ரஷியாவின் பேரிடர் மீட்பு செயலமைப்பு மிக நல்ல முறையில் செயல்படுவது உறுதியாகியுள்ளது என்று இரு ஆய்வு மையங்களும் தெரிவித்தன.

ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. அந்த மையம் அனுப்பிய செயற்கைக்கோள்கள், ஆய்வுக் கலங்கள் மாயமாகியுள்ளன.

இந்தச் சூழலில், விண்வெளி வீரர்களுடன் ராஸ்காஸ்மாஸ் தற்போது அனுப்பிய ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு அது அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்த விபத்துகள்…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுகள் செய்யும்போது ஏற்படும் விபத்துகளில்  பல வீரர்கள் பலியாகியுள்ளனர். அத்தகைய விபத்துகளில் சில…

1967

விண்வெளிக்குச் சென்று திரும்பிய ரஷிய விண்வெளி வீரர் விளாதிமீர் கோமரோவ், தரையிறங்குவதற்குப் பயன்படுத்திய விண்வெளி ஓடத்தில் அடுத்தடுத்து பல கோளாறுகள் ஏற்பட்டு, அவர் பூமியை அடையும்போது அதிலிருந்த பாராசூட் திறக்காமல் போனது. இதனால் அதிக வேகத்தில் தரையில் விழுந்து அந்த ஓடம் வெடித்துச் சிதறியதில் அவர் உயிரிழந்தார்.

1971

சல்யூட் 1 விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சோவியத் ரஷியாவைச் சேர்ந்த ஜார்ஜி டோப்ரோவோல்ஸ்கி, விக்டர் பாட்சயேவ், விளாதிசால்வ் வோல்கோவ் ஆகிய மூவரும், தனது விண்வெளிக் கலம் மூலம் பூமிக்குத் திரும்புவதற்காக புறப்பட்டபோது, அதிலிருந்த ஒரு வால்வு திறந்ததில் அவர்கள் இருந்த பகுதியில் அழுத்தம் வெகுவாகக் குறைந்தது. பூமிக்குத் திரும்பிய அந்த விண்கலத்தை திறந்து பார்த்தபோது மூவரும் இறந்து கிடந்தனர். விண்வெளியிலேயே உயிரிழப்பை ஏற்படுத்திய ஒரே விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

1986

7 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்கா அனுப்பிய சேலஞ்சர் விண்வெளி ஓடம், புறப்பட்ட 73-ஆவது விநாடியில் 15 கி.மீ. உயரத்தில் வெடித்துச் சிதறியது. குளிர்ந்த தட்பவெப்பத்தால் ஓ-வடிவ சீல் பழுந்தடைந்து இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் விண்வெளி ஓடத்திலிருந்த 7 பேரும் உயிரிழந்தனர்.

விண்வெளியில் ஒரு வாரம் ஆய்வு மேற்கொண்டு திரும்பிய கொலம்பியா விண்வெளி ஓடம், பூமிக்குத் திரும்பி, வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது வெப்பத்தைத் தாங்கும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதால் வெடித்துச் சிதறியது. இதில், விண்வெளி ஓடத்திலிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா  உள்ளிட்ட 6 அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஓர் இஸ்ரேலிய விண்வெளி வீரரும் உயிரிழந்தனர்

Related posts: