விடுதலையாகிறார் மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர்!

Thursday, May 17th, 2018

ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து, அவர் புதன்கிழமை (மே 16) விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியடைந்து, பிரதமர் பதவியை ஏற்றுள்ள மகாதிர் முகமது, ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளபடி இன்னும் சிறிது காலத்தில் அந்தப் பொறுப்பை அன்வருக்கு விட்டுத் தருவார் என்று கூறப்படுறது.

இதுகுறித்து அன்வரின் மகளும், எம்.பி.யுமான நூருல் இஷா அன்வர் கூறியதாவது:எனது தந்தையும், முன்னாள் பிரதமருமான அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக கருணை வாரியம் புதன்கிழமை கூடுகிறது.

சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி எனது தந்தைக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் பொதுமன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். தற்போது அன்வர் இப்ராஹிம் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர் மருத்துவமனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளுக்குப் பதவியில் நீடிப்பேன்: இதற்கிடையே, மலேசியாவில் பொருளாதார நிலையை சரி செய்வதற்காக பிரதமர் பதவியில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்போவதாக மகாதிர் முகமது செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதனால், சிறையிலிருந்து விடுதலையானாலும் அன்வர் இப்ராஹிம் பிரதமராவதற்கு இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், ஏற்கெனவே அரசியல் எதிரியாக இருந்த மகாதிரின் ஆட்சியை அன்வர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதில் அரசியல் பார்வையாளர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது.

மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றதையடுத்து, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம், மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் அந்த நாட்டை தொடர்ந்து 61 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த பாரிஸன் நேஷனல் கூட்டணி, முதல்முறையாக ஆட்சியை இழந்தது.

ஏற்கெனவே, இதே பாரிஸன் நேஷனல் கூட்டணியின் சார்பில் கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை மலேசியப் பிரதமராக பொறுப்பு வகித்த மகாதிர், புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியான பகதான் ஹரப்பன் கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கோடிக்கணக்கான டாலர்கள் ஊழல் செய்ததாக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவருக்கு எதிரான பிரசாரத்தில் மகாதிர் ஈடுபட்டார்.

இந்தச் சூழலில், பகதான் ஹரப்பன் கூட்டணியின் ஆதரவைப் பெறுவதற்காக, அதன் தலைவரும், முன்னாள் பிரதமருமான அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு பெற்றுத் தருவதாகவும், சிறிது காலத்துக்குப் பிறகு பிரதமர் பதவியை அன்வருக்கு விட்டுத் தருவதாகவும் மகாதிர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது அரசியல் கூட்டணி அமைத்தாலும், ஏற்கெனவே மகாதிர் ஆட்சி நடைபெற்ற 1998-ஆம் ஆண்டில் அவருக்கு அடுத்தபடியாக பிரதமர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அன்வர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

மலேசியாவில் ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்தான் என்றாலும், அந்தக் குற்றத்துக்காக பெரும்பாலும் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்ற நிலையில், அன்வருக்கு அளிக்கப்பட்ட சிறைத் தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறப்பட்டது.

எனினும், அந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் 2004-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்து தேர்தல்களில் அவர் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு நஜீப் அரசு அவரை மீண்டும் சிறையில் சிறையில் அடைத்து.

Related posts: