வழக்கு தொடுக்கும் அனுமதியால் சர்வதேச சமூகம் கவலை” – சவுதி
Tuesday, October 4th, 2016
செப்டம்பர் பதினென்று தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சவுதி அரேபியா மீது வழக்கு தொடுப்பதை அனுமதிக்க, அமெரிக்க நாடாளுமன்றம் வாக்களித்திருப்பது சர்வதேச சமூகத்திற்கு கவலையளிக்கும் மிக பெரிய விடயமாகும் என்று சவுதி அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த வாக்களிப்பால் ஏற்படும் ஆபத்தான எந்தவொரு விளைவையும் தவிர்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றம்தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புவதாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.
இத்தகைய சட்டம் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க படைப்பிரிவுகளும் வழக்குகளை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தக்கூடும் மற்றும் சவுதி அரேபியாவுடனான உறவுகளில் முறுகல் நிலையை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கைக்கு பின்னரும், இந்த மசோதா மீதான அதிபர் பராக் ஒபாமாவின் வெட்டு அதிகாரத்தையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை இதற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட விமானம் ஒன்று அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனில் மோதிய போது கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் விதவையான ஸ்டெபானியே ரோஸ் டிசீமோன், அல்-கயீதாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளித்ததாக வெள்ளிக்கிழமை சவுதி அரேபியா மீது முதல் நபராக வழக்கு பதிவு செய்துள்ளார்.
Related posts:
|
|