வளைகுடாவில் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி?

Wednesday, July 19th, 2017

கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய அரபு எமிரட்ஸ் மறுத்துள்ளது.

இந்த இணையத்தள சைபர் தாக்குதலானது கடந்த மே மாதம் 23ம் திகதி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டானது கட்டார் மற்றும் அயல் நாடுகளுக்கு இடையில் பிரச்சினையை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரட்ஸின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்வர் கர்காஸ் தெரிவித்துள்ளார்.

கட்டார் நாட்டு அரச தலைவர் தொடர்பில் வீணான தகவல்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்று ஐக்கிய அரபு எமிரட்ஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு தெரிவித்ததாக வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஐக்கிய அரபு எமிரட்ஸின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், 2022ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிகளை கட்டாரில் நடத்த விடாமல் தடுப்பதற்கான எந்தவொரு அழுத்தமும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தீவிரவாத செயற்பாடுகளுக்கு கட்டார் உதவி வழங்கி வருவதாக தெரிவித்து சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடந்த 5ம் திகதி கட்டாருடனான தொடர்பை துண்டித்து கொண்டன.

எனினும், இந்த குற்றச்சாட்டை கட்டார் மறுத்திருந்த நிலையில், கட்டாரில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: