வடகொரிய தலைவரை சந்திக்க தயார் – தென்கொரிய அதிபர்!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருப்பதாக தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம்(09) இருதரப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் நடந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே முதன்முதலாக நடந்துள்ள இந்த சந்திப்பு இணக்கமாக அமைந்துள்ளது. தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தனது நாட்டு அணியை அனுப்ப வடகொரியா ஒப்புக்கொண்டது.
இது இருதரப்பு உறவில் ஒரு திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன் நேற்று(10) சியோலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதன்போது, “குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வடகொரியா அறிவித்து இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. அதே நேரத்தில் வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவராத வரையில், இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு விடாது” என்று கூறினார்.
“புதிதாக ஆத்திரம் ஏற்படுத்துகிற வகையில் வடகொரியா செயல்பட்டால், அந்த நாடு இன்னும் சர்வதேச அளவிலான பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் அணு ஆயுதங்களை கைவிடுவது தான் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான வழியாக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும், அணு ஆயுத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்கிற பட்சத்தில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|