வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை இயந்திரம் சோதனை!
Sunday, April 10th, 2016கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையின் இயந்திரத்தின் சோதனையை நடத்தி வடகொரியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்த அந்த நாடு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி மிக பயங்கரமான ஹைட்ரஜன் குண்டினை முதன் முதலாக வெடித்து சோதித்ததாக அறிவித்தது.
சர்வதேச அளவில் இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கிற விதமாக ஐ.நா. புதிய பொருளாதார தடைகளை விதித்து கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனாலும் வடகொரியா அதையும் பொருட்படுத்த வில்லை. ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மற்றொரு பக்கம் உலக நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதுடன், சிறிய அளவிலான அணுகுண்டுகளையும் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் அந்த நாடு அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இயந்திர சோதனையை நடத்தி உள்ளது.
இந்த சோதனை, வடகொரியாவின் மேற்கு கடலோர பகுதியில் தொலைதூர ஏவுகணை ஏவுதளத்தில், நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் நடந்தது. சோதனையின்போது அந்த இயந்திரம், காதை செவிடாக்கும் வகையில் மிகுந்த சத்தத்துடன் தீப்பிழம்புகளை கக்கி சென்றது என வடகொரிய அரச செய்திகள் இந்த சோதனை பற்றி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறும்போது, ‘‘இப்போது நம்மால் அமெரிக்காவின் பிரதான பகுதி உள்பட இந்த புவிக்கோளின் எந்தவொரு பகுதியிலும் பகைவர்களை தாக்க முடியும்’’ என குறிப்பிட்டதாக அந்த செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.
அமெரிக்காவுக்கு அணுகுண்டுகளை சுமந்து சென்று ஏவுகணை தாக்குதல் நடத்துகிற ஆற்றலை வடகொரியா பல்வேறு கட்டங்களாக அடைந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்ஜின் சோதனை குறித்து வாஷிங்டனில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கருத்து தெரிவிக்கையில், ‘‘வட கொரியா இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராந்தியம் மேலும் சீர்குலைந்து போகும். அதற்கு பதிலாக வட கொரியா ஏற்கனவே அளித்த தனது வாக்குறுதிகளையும், சர்வதேச பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
Related posts:
|
|