வடகொரியாவின் ஜனாதிபதிக்கு மக்கள் பாராட்டு!

Sunday, June 11th, 2017

தரையிலிருந்து கடலில் செல்லும் கப்பல்களை தாக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியளித்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடகொரிய நாட்டுமக்கள் ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஏவுகணை வெற்றியளித்துள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பான சுவரொட்டிகளை பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிடுவது இது தொடர்பான காணொளிகளில் பதிவாகியுள்ளது.

உலகின் பணக்கார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மீது தற்போது வடகொரியாவின் பார்வை திரும்பியுள்ள நிலையில், அமெரிக்காவை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனை, ஏவுகணைச் சோதனை நடவடிக்கையில் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணை வடகொரியாவால் ஏவப்பட்ட முன்னைய ஏவுகணைகளையை விட திறன் வாய்ந்தது எனவும் தரையிலிருந்தே கடலில் வரும் போர்க்கப்பல்களை அழிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவிடமிருந்து கொரிய தீபகற்பத்தை காப்பாற்ற, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தது. இந்நிலையில், வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணைச் சோதனை, அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என சிந்திக்க வைத்துள்ளது.

Related posts: