லேசர் தாக்குதல்: அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!

Saturday, May 5th, 2018

தங்கள் விமானிகள் மீது சீனர்கள் லேசர் கதிர்களை வீசி தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் ஜிபூடி நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளம் அருகே, சீனாவும் தனது விமான தளத்தை அமைத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க விமான தளத்தில் அந்த நாட்டின் சி-130 ரக சரக்கு விமானம் அண்மையில் தரையிறங்கியபோது, அதிலிருந்த விமானிகள் மீது லேசர் கதிர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் இரு வீரர்கள் லேசாக காயமடைந்ததுடன், விமானம் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டதாகவும் பென்டகன் குற்றம் சாட்டியது.

மேலும், இந்த லேசர் தாக்குதல் அருகிலுள்ள சீன விமான தளத்திலிருந்து நிகழ்த்தப்பட்டதாக சீன அதிகாரிகளிடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக முறையிட்டது. இந்த நிலையில், இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யங் கூறியதாவது:

லேசர் கருவி மூலம் அமெரிக்க விமானிகள் மீது சீனா தாக்குதல் நிகழ்த்தியதாகக் கூறப்படுவது, அடிப்படை முகாந்திரமற்ற குற்றச்சாட்டு ஆகும். இந்த விவகாரம் குறித்து தீர விசாரித்ததில், அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

Related posts: