ரஷ்யா – சீனா கூட்டு போர் பயிற்சி !

Tuesday, May 10th, 2016

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

வடகொரியா அடுத்தடுத்து அணுஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் எழுந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் ஒத்திகை நடத்தின.

இதைத் தொடர்ந்து ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன சாதனங்களை தென்கொரியாவில் நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி வடகொரியாவின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தென்கொரியாவில் நிறுவப்பட உள்ளன.

கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கு சீனாவும் ரஷ்யாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ஏவுகணை தாக்குதலை சமாளிப்பது தொடர்பான போர் ஒத்திகையை நடத்த முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டுப் போர் ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாத இறுதியில் மாஸ்கோவில் போர் ஒத்திகை நடைபெறும் என்று சீன நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய, சீன அரசு வட்டாரங்கள் கூறியபோது, எந்தவொரு 3-ம் நாட்டுக்கும் எதிராக நாங்கள் போர் ஒத்திகையை நடத்தவில்லை. எங்கள் தற்காப்புக்காகவே நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளன.

சிரியாவில் அந்த நாட்டு அதிபர் ஆசாத்துக்கு எதிராக அமெரிக்க ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. அதற்குப் பதிலடியாக சிரியாவில் ரஷ்ய ராணுவம் களமிறங்கியது.

அதேபோல வடகொரியா பிரச்சினையிலும் சீனாவும் ரஷ்யாவும் ஓரணியில் நின்று அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: