ரஷ்யாவுடனான உறவை முறிக்க அமெரிக்கா முடிவு?

Saturday, October 1st, 2016

சிரியாவின் யுத்த நிறுத்தம் தொடர்பில் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தும் முடிவை அமெரிக்கா நெருங்கி விட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி எச்சரித்துள்ளார்.

சிரியாவின் அலெப்போ நகர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தரப்பில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.ஒரு வாரத்திற்கு முன்னர் சிரியாவில் யுத்த நிறுத்தம் முறிந்த நிலையில் சிரிய அரசு மற்றும் ரஷ்யா நாட்டின் மிகப்பெரிய நகரான அலெப்போவை கைப்பற்றும் முயற்சியாக அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. சிரியாவின் கடந்த ஐந்தரை ஆண்டு யுத்தத்தில் இது மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது.

இதன்போது சிரிய அரச படை நகரின் வடக்கில் சில கிலேமீற்றர் தூரத்தில் இருக்கும் ஹன்தரத் முகாமை கைப்பற்றி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டபோதும். கிளர்ச்சியாளர்களின் பதில் தாக்குதலை அடுத்து அந்த பகுதியை இழந்துள்ளது.

மறுபுறம் கிளர்ச்சியாளர்கள் மத்திய நகரான ஹமாவில் தாக்குதல்களை ஆரம்பித்து முன்னேற்றம் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அலெப்போவில் ரஷ்யா ராஜதந்திர முயற்சிகளை தோல்வியடையச் சொய்திருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டி இருப்பதோடு, ரஷ்யாவும் சிரிய அரச படையும் அங்கு சிவிலியன்கள், மருத்துவமனைகள் மற்றும் உதவி வாகனங்களை இலக்கு வைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

கிளர்ச்சியாளர் வசமுள்ள கிழக்கு அலெப்போவில் 250,000 மக்கள் முற்றுகையில் சிக்கியுள்ளனர்.அலெப்போ மீதான சிரிய அரசு மற்றும் ரஷ்யாவின் தாக்குதல் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவுக்கே வாய்ப்பை ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டிய அமெரிக்கா, ஆயுததாரிகளுக்கு மேலும் ஆட்கள் சேர்க்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.

தமது அரசு சிவிலியன்களை கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிரியாவின் ஐ.நா தூதுவர் பஷர் ஜபாரி மறுத்துள்ளார்.எவ்வாறாயினும் அமைதி முயற்சிகளை புறக்கணித்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துடன் இணைந்து இராணுவ வெற்றிக்கு முயற்சிக்கும் ரஷ்யா மீது கடும் பதில் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

“இவ்வாறு குண்டுகள் போடப்படும் நிலையில் அவர்களுடன் அமர்ந்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது பகுத்தறிவுக்கு பொருந்தாது என்பதால் நாம் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தும் விளிம்பில் இருக்கிறோம்” என்று வொஷிங்டனில் நடந்த ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார். “நாம் மாற்று வழியில் அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் ஒன்று வந்துவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கெர்ரி கடந்த வியாழனன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ்வுடன் தொலைபேசியில் உரையாடி இருந்தார். எனினும் சிரிய பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவது குறித்து அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது தொடர்பில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சிறிய கால அவகாசம் வழங்கி இருப்பதாக ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

அலெப்போ நகரை கைப்பற்றும்பட்சத்தில் அரச படைக்கு சிரிய யுத்தத்தில் பாரியதொரு திருப்பமாக மாறிவிடும்.பல தரப்பு யுத்தமாக மாறியிருக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஆயிரக்கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு நாட்டின் பாதி எண்ணிக்கையிலான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் நாட்டின் கிழக்கின் பெரும்பகுதி இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவிடம் வீழ்ந்துள்ளது. இந்த யுத்தத்தில் ஐ.எஸ் குழு ஏனைய அனைத்து தரப்புகளினதும் எதிரியாக மாறியுள்ளது.

coltkn-10-01-fr-03160901837_4827385_30092016_mss

Related posts: