ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனில் போராட்டம்!

Tuesday, November 27th, 2018

கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த ஏராளமான யுக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதுடன் இது தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.

தங்கள் நாட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக இராணுவ சட்டம் குறித்து அந்நாட்டு உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தனது கடல் எல்லைக்குள் யுக்ரேன் கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைந்து விட்டதாக ரஷ்யா குற்றம்சாட்ட தொடங்கியதில் இருந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை ஆரம்பித்தது.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்திக்கு கீழே உள்ள ஒரு பாலத்தில் தனது டேங்கர் கப்பல்களை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.

அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதையாக கெர்ச் ஜலசந்தி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யுக்ரேனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ ரஷ்யாவின் நடவடிக்கைகளை தேவையற்றது மற்றும் பைத்தியகாரத்தனமானது என்று வர்ணித்துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டுமென ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தகவலை ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி உறுதி செய்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் ரஷ்யாவால் இணைத்து கொள்ளப்பட்டு சர்ச்சையான கிரிமியா தீபகற்பத்துக்கு அப்பால் உள்ள கருங்கடல் மற்றும் அஸோவ் கடல் பகுதிகளில் அண்மையில் பதட்டம் அதிகரித்துள்ளது.

Related posts: