ரஷிய தலையீடு விவகாரம்: விசாரணைக் குழு முன்பு ஆஜராகத் தயார் – டிரம்ப்!

Sunday, May 6th, 2018

கடந்த 2016- ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு இருந்தது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராக தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக உள்ள ராபர்ட் முல்லர், முன்பு ஒபாமாவின் ஆட்சியில் எஃப்.பி.ஐ. விசாரணை அமைப்பின் தலைவராக இருந்தவர்.

மேலும், விசாரணைக் குழுவில் உள்ள பல உறுப்பினர்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் என்னை குறிவைத்து விசாரணை நடத்தவில்லை என்கிறார்கள். என்னை குறிவைத்து விசாரணை நடத்தவில்லை என்றால் விசாரணைக் குழுவில் அனைவரும் ஜனநாயக கட்சியினராக இருப்பது ஏன்?. விசாரணை நியாயமாக நடைபெறும் என்றால் விசாரணைக் குழு முன்பு ஆஜராகத் தயாராகவே இருக்கிறேன்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் எங்கள் குடியரசுக் கட்சி சிறப்பாக பிரசாரம் மேற்கொண்டு, மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால், இப்போது எனக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள் என்றார் டிரம்ப்.

முன்னதாக, ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக் குழு டிரம்ப்பை விசாரிக்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளியானது.

Related posts: