யேமனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. 2 பில்லியன் நிவாரண உதவி!
Friday, February 10th, 2017யேமனில் கடந்த இரண்டு ஆண்டுகால போரினால் கடும் பஞ்சத்தை எதிர்க்கொண்டுள்ள சுமார் 12 மில்லியன் மக்களுக்கு நிவாரணமாக 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஐ.நா. முன்வந்துள்ளது.
குறித்த 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் பிற உயிர் காக்கும் நிவாரண உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
உலகளாவிய ரீதியில் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நாடுகளில் யேமனும் ஒன்றாகும். இங்கு திகைக்க வைக்கும் அளவில் 7.3 மில்லியன் மக்கள் பஞ்சத்தை எதிர்க்கொண்டுள்ளதுடன், அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கப் போகின்றது எனத் தெரியாத நிலையில் தமது வாழ்நாளை கழித்து வருவதாக மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெமி மெக்கோல்ட்ரிக் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், யேமனில், குழந்தைகளுக்கு உணவை பெற்றுக் கொடுப்பதா அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொடுப்பதா என்பது அங்குள்ள பல குடும்பங்களுக்கான பிரச்சினையாகும். 3.3 மில்லியன் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களும் தீவிர போஷாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஐந்து வயதிற்குட்பட்ட 4 இலட்சத்து 60 ஆயிரம் சிறுவர்களும் கடுமையான ஊட்டச்சத்து பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை, யேமனிலுள்ள மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட சுமார் 19 மில்லியன் பேர் பாதுகாப்பு தேவையை எதிர்க்கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதநேய விவகாரங்களுக்கான நெருக்கடி நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஓ பிரையன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|