மு.க. ஸ்டாலின் கைது!

Thursday, April 5th, 2018

மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில் சென்னை அண்ணா சாலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டதால் அந்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறியல் போராட்டம் பேரணியாக உருவெடுத்ததால் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து முன்னேறினர். காமராஜர் சாலையை சென்றடைந்ததும், அனைவரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் குறித்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்டாலினை பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: