மியன்மாரில் கோபி அன்னானுக்கு கடும் எதிர்ப்பு!

Wednesday, September 7th, 2016

மியன்மாரில் மதக் கலவரம் காரணமாக ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்திருக்கும் பதற்றம் கொண்ட ரகினே மாநிலத்தில் கண்காணிக்க வந்த ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அன்னானுக்கு எதிராக நூற்றுக்கணக்கான கடும்போக்கு பெளத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மியன்மாரில் ஆன் சான் சூக்கியின் புதிய அரசு ரகினே மாநிலத்தின் பதற்றத்தை தணிக்க நல்லிணக்க செயற்படுகளுக்கு நியமித்த ஆணைக் குழுவுக்கு அன்னான் தலைவராக உள்ளார்.

பங்களாதேஷ் எல்லையை ஒட்டி இருக்கும் ரகினே மாநிலத்தில் 2012 தொடக்கம் ரகினே பெளத்தர்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடையில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக போதிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னான் வருவதை ஒட்டி மாநிலத் தலைநகர் சித்வே விமானநிலையத்திற்கு வெளியில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது ‘கொபி அன்னானின் ஆணைக் குழுவுக்கு இடமில்லை’ என்று கோஷமெழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், “எமது ரகினே மாநிலத்தில் பக்கச்சார்பான வெளிநாட்டினரின் தலையீட்டை அனுமதிக்க முடியாது” என்ற பதாகைகளையும் ஏந்தி நின்றனர்.

எனினும் ரகினே மாநிலத்திற்கு சென்றிருக்கும் அன்னான் மற்றும் பிரதிநிதிகள் ரொஹிங்கியாக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட இருப்பதோடு மாநில தலைவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

எனினும் அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியான அரகான் தேசிய கட்சி ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளரை சந்திப்பதை நிராகரித்துள்ளது.

மியன்மாரில் வாழும் சுமார் ஒரு மில்லியன் ரொஹிங்கியாக்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்படுவதோடு அவர்களை இனக்குழு ஒன்றாக அரசு உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லை. ரொஹிங்கியாக்களின் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதோடு ஒடுக்குமுறைகள் காரணமாக அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைய அபாயகரமான படகு பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

coltkn-09-07-fr-04164605425_4726790_06092016_mss_cmy

Related posts: