மாயமான விமானம்: அமெரிக்காவை நாடிய இந்தியா!
Saturday, July 30th, 2016
அந்தமானில் மாயமான விமானப்படை விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து அந்தமானுக்குச் சென்றபோது மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து மாநிலங்களவியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மாயமான விமானத்தை தேடி கண்டுபிடிக்க தேவையான அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்தார்.
அமெரிக்கா செயற்கை இடைக்கண் ரேடார்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் பரந்த பார்வை வசதியை பெற்றிருப்பதால், அந்த நாட்டின் உதவியை மத்திய அரசு நாடி உள்ளது. விமானம் மாயமான போது அடர்ந்த மேகக்கூட்டங்கள் இருந்த சூழ்நிலையில் கூட, அவற்றால் சிக்னல்களை எடுத்துக் கொள்ள முடியும்.
விமானம், திடீரென மாயமானது குறித்து பாதுகாப்புத்துறை வல்லுனர்களிடம் பேசியுள்ளதாகவும் அவர்களும் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வர முடியாமல் உள்ளதாகவும் பாரிக்கர் குறிப்பிட்டார்.விமானம் ரேடாரில் மறைந்து போவதற்கு முன்பாக சாய்ந்து, 23 ஆயிரம் அடியில் இருந்து மிக வேகமாக கீழே இறங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் இருந்து ஆபத்து குறித்த கடைசி தகவல் உள்ளிட்ட எந்த தகவலும் பெறப்படவில்லை. எல்லாமே வெறுமையாகியுள்ளது.
அதே நேரத்தில் நாசவேலைக்கான வாய்ப்பும் மிகவும் குறைவுதான். ஐ.என்.எஸ். நிருபக் கப்பல் மூலம் கடலின் அடிப்பகுதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஐ.என்.எஸ். சிந்துதுர்க் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|