மாயமான மலேசிய விமானத்தின் இயந்திரம் தென்னாபிரிக்க கடலில் கண்டுபிடிப்பு?

Thursday, March 24th, 2016

239 பேருடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானத்தின் இயந்திரம் தென்னாபிரிக்க கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.

மலேசிய எயார்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர். இந்திய பெருங்கடல் மீது பறந்த போது அந்த விமானம் திடீரென மாயமானது. எனவே அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருக்க கூடும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பாகங்களை தேடும் பணி நடந்தது. ஆனால் எதுவும் கிடைக்காததால் அதில் பயணம் செய்த 239 பேரும் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் பிரான்சின் ரீயூனியன் தீவில் விமானத்தின் இறக்கைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றை அவுஸ்திரேலியாவின் நீர்மூழ்கி வீரர்கள் தென் இந்திய பெருங்கடலில் மீட்டனர்.

இதற்கிடையே தற்போது தென்னாபிரிக்காவின் தெற்கு கடற்கரை பகுதியில் கேப்டவுன் அருகே மொசல்பே நகர கடலில் ஒரு விமானத்தின்  இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

அது விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தின் இயந்திரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இத்தகவலை மலேசிய போக்குவரத்து மந்திரி லியோவ் நியாங் லை தெரிவித்துள்ளார்.

இது மாயமான விமானத்தின் இயந்திரமா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் மொசாம்பிக் கடலில் விமானத்தின் உடைந்த 2 பாகங்களை அவுஸ்திரேலியா மீட்பு குழு கண்டுபிடித்தது. அதுவும் மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 

Related posts: