மருத்துவத்திற்கு மறுப்பு: தந்தையின் தோளில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Tuesday, August 30th, 2016

இந்தியா உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் 12 வயது சிறுவன் தனது தந்தையின் தோளிலேயே உயிரை விட்டுள்ள பரிதாபம் நடந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பசல்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். அவரது மகன் அன்ஷ்(12). கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

உடனே சுனில் அவரை உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்தும் பலனில்லை. காய்ச்சலின் வேகம் அதிகரித்ததையடுத்து அவர் அன்ஷை கான்பூரில் உள்ள எல்.எல்.ஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி மறுத்ததுடன், முதலுதவி தள்ளு வண்டி கூட தர மறுத்துள்ளனர். இதையடுத்து அன்ஷ், தனது தந்தையின் தோளிலேயே உயிர் இழந்தார்

இது குறித்து சுனில் கூறுகையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர்களை எனது மகனை பரிசோதித்து மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கெஞ்சினேன். அரை மணிநேரம் கழித்து என் மகனை சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள் என் மகனை அழைத்துச் செல்ல ஒரு முதலுதவி தள்ளு வண்டிகேட்டதற்கு தர மறுத்துவிட்டனர். என் மகனை தோளில் சுமந்தபடி 250 மீட்டர் தொலைவில் உள்ள சிறுவர்கள் மருத்துவமனைக்கு வந்தேன் ஆனால் வழியிலேயே என் மகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகும் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. என் மகனின் உடலை தோளில் சுமந்தபடியே வீடு வந்தேன் என்றார்.

Related posts: