மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் : பிரதமர் மோதிக்கு கெளதமி மனு!
Saturday, December 10th, 2016
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் மொத்த தகவல்களும் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துமாறும் நடிகை கெளதமி பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா காலமானார். அதற்கு மறுநாள் தமிழக முதல்வரின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு பின்னால் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திரைப்பட நடிகை கெளதமி பல சந்தேகங்களை எழுப்பி பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதிர்ச்சி மரணம்
தமிழக முதல்வரின் அதிர்ச்சி மறைவு குறித்த செய்தியை அறிந்து வருத்தப்பட்ட கோடான கோடி மக்களில் நானும் ஒருத்தி. இந்திய அரசியலில் ஜெயலலிதா ஆளுமைமிக்க நபராகவும், பெண்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாகவும் விளங்கியவர். எல்லா பிரச்சினைகளிலும் ஜெயலலிதாவின் மறுக்க முடியாத வலிமை மற்றும் அவருடைய விடாமுயற்சி குணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தங்கள் கனவுகளை நோக்கி செல்ல தொடர்ந்து ஊக்குவிக்கும்.
முதல்வரின் சிகிச்சைகளை தீர்மானித்தது யார்?
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் அதிக சோகம் மற்றும் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து திடிரென மறைந்தது வரை பதிலளிக்கப்படாத கேள்விகள் நிறைய உள்ளன. இந்த விஷயங்கள் குறித்து நிறைய தகவல்கள் மொத்தமாக மறைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை நேரில் சந்திக்க பல முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தின் முதல்வராக, பொதுமக்களின் அன்பிற்கினிய தலைவராகவும் இருந்த ஒருவரை எதற்காக தனிமைபடுத்தி மற்றும் ரகசியமாக வைக்க வேண்டும். முதல்வரின் சிகிச்சைகளை தீர்மானித்தது யார்? இதுபோன்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போவது யார் ? என்றார் கௌதமி.
முதல்வரின் மரணம் தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் இத்தகைய பெரும் அளவிலான ஒரு சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வு கேள்வி கேட்கப்படமாலோ அல்லது கண்டிப்பாக பதிலளிக்கப்பட முடியாமலோ சென்றுவிடக்கூடாது. பின், எவ்வாறு ஒரு சாதாரண குடிமகன் தன்னுடைய சொந்த உரிமைகளுக்காக போராடும் போது என்ன வாய்ப்பு இருக்கிறது?, என்று கேட்டார் கௌதமி.
என் சக குடிமகனின் கேள்விகளுக்கு செவிமடுங்கள் மோதி
ஒவ்வொரு குடிமகனின் உரிமையையும் உறுதியாக நிலைநாட்டும் நோக்கில் என்னுடைய கவலையை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள் என்பதை முழுமையாக நம்புகிறேன். எனது சக குடிமகனின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பீர்கள் என்பதை முழுமையாக நம்புகிறேன், என்று பிரதமர் மோதிக்கு எழுதிய இந்த கடிதத்தில் நடிகை கெளதமி குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து பகிர்ந்துள்ளார்.
Related posts:
|
|