மன்னிப்பு கேட்டார் இம்ரான்கான்!

Saturday, October 28th, 2017

வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விடயத்தில் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் சர்ச்சைக்கிடம் அளிக்கிற வகையில் விமர்சித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்த நாட்டின் தேர்தல் கமிஷனிடம் 2 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை வழக்காக ஏற்று தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த முடிவு செய்தது. இந்த விசாரணைக்கு இம்ரான்கான் நேரில் ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய ஜாமீனில் விட முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த வழக்குகள் தேர்தல் கமிஷனில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இம்ரான்கான் நேரில் ஆஜரானார். அவருடன் அவரது வக்கீல் பாபர் அவான், கட்சியின் தலைமை பொதுச்செயலாளர் ஜகாங்கிர் தரீன் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.

விசாரணையின்போது, இம்ரான்கான் வக்கீல் பாபர் அவான், இம்ரான் கான் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்காக 2 முறை மன்னிப்பு கேட்டு விட்டதால், அவமதிப்பு வழக்குக்கு இடம் இல்லை என்று வாதிட்டார்.

தலைமை தேர்தல் கமிஷனர் சர்தார் முகமது ராசா தலைமையிலான 5 உறுப்பினர்கள் அமர்வு, இம்ரான்கானின் மன்னிப்பை முதல் வழக்கில் ஏற்றது.

2-வதாக இம்ரான் கான் கராச்சியில் வைத்து தேர்தல் கமிஷனுக்கு எதிராக கூறிய மோசமான கருத்து தொடர்பாக எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. இதையடுத்து அவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கடிதம் தந்தார். இதையடுத்து அவருக்கு எதிரான அவமதிப்பு வழக்குகள் முடிவுக்கு வந்தன.

Related posts: