போராட்டங்கள் முடியாத நிலையில் அலங்காநல்லூரில் ஏன் இந்த திடீர் மாற்றம்?
Monday, January 23rd, 2017
மதுரை அலங்காநல்லூரில் நேற்று இரவு வரை ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறிவந்த நிலையில், இன்று திடீரென கிராம கமிட்டிக் கூடி, பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்று அலங்காநல்லூரில் இன்று காலை கூடிய ஊர் கமிட்டி முடிவு செய்துள்ளது.
அலங்காநல்லூர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது காவல்துறை ஒரு பக்கம் தடியடி நடத்தியும், புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலைப் பார்த்துக கொண்டிருக்கும் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அலங்காநல்லூரில் அவசர அவசரமாக கிராம ஊர் கமிட்டி கூட்டப்பட்டு, பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏராளமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஊர் கமிட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வரும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தனி இட வசதி செய்து கௌரவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட கிராம மக்கள், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வளவு நாட்களாக சொந்த வீடு வாசலை விட்டு, அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் என்ன ஆனார்கள், அவர்களது ஒப்புதல் கிடைத்ததா என்பது பற்றிய தகவல்களும் கிடைக்கவில்லை.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன், நேற்றைய தினமே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உடனடியாக அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி, அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள், அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்க சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அலங்காநல்லூருக்கு வராமலேயே சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|