போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றவில்லை: காவல்துறை விளக்கம்!

சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றவில்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்களை வெளியேற்ற அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறி வருகிறோம். வலுக்கட்டாயமான நடவடிக்கை என்று கூறுவதே தவறு.
நேற்று இரவு, போராட்டக்காரர்களிடம், அவசரச் சட்டம் குறித்த நகலையும் அளித்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தோம். அப்போது காலைக்குள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினார்கள்.
அதே போல, இன்று காலையும் வெளிச்சம் வந்த பிறகு அவசரச் சட்டம் குறித்து எடுத்துக் கூறி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். தொடர்ந்து அமைதியான முறையில் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னமும் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி வருகிறோம் என்று கூறினார்கள்.
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, காவலர்கள் யாரிடமும் தடி கொடுக்கப்படவில்லை. இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட வாய்ப்பே இல்லை. அவர்கள் மீது தடியடி நடத்தக் கூடாது என்பதே முக்கிய உத்தரவு என்று கூறினார்.
காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேசுவோம். முடிந்தவரை சந்தேகங்களை தெளிவுபடுத்துவோம். அலங்காநல்லூரில் கூட போராட்டங்கள் முடிவுக்கு வந்து, ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிப்போம் என்றார்
Related posts:
|
|