பொருளாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: மிரட்டும் ட்டிரம்ப்!

Saturday, September 1st, 2018

சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் உலகப் பொருளாதார அமைப்பிலிருந்து விலகப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

உலகப் பொருளாதார அமைப்பை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான், உலகிலேயே மிக மோசமான பொருளாதார ஒப்பந்தமாக இருக்கும்.

அந்த அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிரான அம்சங்களைப் போக்கி, சீர்திருத்தத்தை ஏற்படுத்தாவிட்டால் அந்த அமைப்பை விட்டு வெளியேறுவோம் என்றார் அவர்.

உலகப் பொருளாதார அமைப்பின் பல்வேறு கொள்கைகள், அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக இருப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

தற்போது அமெரிக்காவுடன் வர்த்தகப் பதற்றத்தில் இருந்து வரும் சீனா, இந்த அமைப்பில் 2001-ஆம் ஆண்டு இணைந்தது. எனினும், உலகப் பொருளாதார அமைப்பில் சீனாவைச் சேர்த்தது தவறான நடவடிக்கை என்று அமெரிக்கப் பொருளாதாரத் துறை பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைனஸர் கூறி வரும் நிலையில், அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில், பிற நாடுகள் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி வரும் டொனால்ட் டிரம்ப், சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தார்.

எனினும், உலகப் பொருளாதார அமைப்பின் விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி, டிரம்ப்பின் அந்த அறிவிப்புகளுக்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் காரணமாகவே, அந்த அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராக டிரம்ப் கடுமையான கருத்துகளைக் கூறி வருவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் முயற்சியில் உருவான பல்வேறு சர்வதேச அமைப்புகளில் உலகப் பொருளாதார அமைப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: