பேச்சுவார்த்தை நடத்தத் தயார் -கட்டார்!

Sunday, July 23rd, 2017

சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகள் கட்டாருடன் கொண்டுள்ள சர்ச்சையை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கட்டார் இளவரசர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கட்டாரிலிருந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இருப்பினும், குறித்த பேச்சுவார்த்தைகள் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “கட்டார் மீது சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகள் மேற்கொண்ட முற்றுகையானது அநியாயமானது. இருப்பினும் அது கட்டாரின் நடவடிக்கைகளை பாதிக்கவில்லை. வழமை போல் நடவடிக்கைகள் தொடர்கின்றன” என தெரிவித்தார்.

கட்டார் பயங்கரவாதத்திற்கு துணை செல்கின்றது எனக் குற்றஞ்சாட்டி ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பஹ்ரேன், எகிப்து மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது உறவுகளை முறித்துக்கொண்டன. இருப்பினும், மேற்குறித்த குற்றச்சாட்டை கட்டார் முற்றாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.