பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாத நிலையில் மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை!

மணிப்பூரில் பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாததால், 6-ம் வகுப்பு மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.
மாணவர் சுரேஷ் தாங்ப்ராமை அடித்துக் கொன்றதாக போலீஸ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து உள்ளது. மாணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவர் இயற்கைக்கு மாறாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளன. மாணவர் சுரேஷின் தந்தை பிரா தாங்ப்ராம் பேசுகையில், “என்னுடைய மகனை இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இம்பால் அருகே உள்ள லாங்கோலில் உள்ள வீட்டு குழந்தைகள் பராமரிப்பு பள்ளியில் சேர்த்தேன், என்னுடைய வறுமை காரணமாக பள்ளி மற்றும் விடுதியின் கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை.
பள்ளி அதிகாரிகள் கட்டணத்தை செலுத்துங்கள் அல்லது உங்களது மகனை அழைத்து செல்லுங்கள் என்று வலியுறுத்தினார்கள். நான் என்னுடைய மகனை அழைக்க சென்றபோது கட்டணத்தை செலுத்தாவிட்டால் உங்களுடைய மகனை அனுப்ப மாட்டோம் என்று கூறினர். பின்னர் பள்ளி அதிகாரிகள் என்னுடைய மகனை வெள்ளிக்கிழமை இரவு அழைத்து வந்தார்கள். என்னுடைய மகனின் உடல் முழுவதும் காயம் காணப்பட்டது. கீழ்ப்படியாத காரணத்தினால் உங்களுடைய மகனை அடித்தோம் என்று கூறினார்கள். கடும் சீற்றத்துடன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றனர்,” என்று கூறிஉள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சரிந்த மாணவன் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு திரும்பியபோது உயிரிழந்தான். இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரா பேசுகையில், எனக்கு நீதி கிடைக்கும் வரையில் சடலத்தை திரும்ப பெற மாட்டேன், பள்ளி அதிகாரிகள் கொடுமை செய்ததில்தான் என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்று குற்றம் சாட்டினார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும் பள்ளி நிர்வாகம் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
Related posts:
|
|