பிலிப்பைன்ஸ் நாட்டில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட கனடா சுற்றுலாப்பயணி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.

Wednesday, April 27th, 2016

பிலிப்பைன்ஸ் நாட்டில் அபு சயாப் என்ற ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழு இயங்கி வருகிறது. முதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்பட்ட இந்த தீவிரவாத குழு, இப்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோலோ மற்றும் பாசியான் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிற இந்த தீவிரவாத குழுவின் நோக்கம், அங்கு தனி இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதாகும். இதற்காக வெளிநாட்டினரை கடத்தி செல்வது, போதைப்பொருட்களை கடத்துவது, பெண்களை கற்பழிப்பது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் இந்த அபு சயாப் தீவிரவாத குழு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு தாவோ என்ற நகருக்கு அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஜான் ரிட்ஸ்டெல் (வயது 68), மற்றொரு கனடா பிரஜை, நார்வே நாட்டு பிரஜை ஒருவர், பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் என 4 பேரை இந்த அபு சயாப் தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்து கடத்தி சென்றனர்.

அவர்கள் அங்கு ஜோலோ தீவில் உள்ள காட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அவர்களை உயிரோடு மீட்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 6.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.42¼ கோடி) பணயத்தொகை தர வேண்டும் என்று அபு சயாப் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். 25–ந் தேதி (நேற்றுமுன்தினம்) உள்ளூர் நேரப்படி பகல் 3 மணி வரை இறுதிக்கெடு விதித்தனர். தராவிட்டால் அவர்களில் ஒருவர் முதலில் கொல்லப்படுவார் என அறிவித்தனர். இதுதொடர்பாக மிரட்டல் வீடியோவும் வெளியானது.

அந்தக் கெடு முடிந்து சில மணி நேரத்தில் கனடாவை சேர்ந்த ஜான் ரிட்ஸ்டெல்லை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து விட்டனர். ஜோலோ நகரின் மையப்பகுதியில் அவரது தலை கண்டெடுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 தீவிரவாதிகள், பிளாஸ்டிக் பையில் வைத்து அவரது தலையை நகரின் மையப்பகுதியில் வீசிச்சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஜான் ரிட்ஸ்டெல், சுரங்க நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். விடுமுறையில் சுற்றுலாவாக பிலிப்பைன்ஸ் வந்த இடத்தில் இந்த அநியாய முடிவு அவருக்கு நேரிட்டுள்ளது.

இந்த படுகொலைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டுருதியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் நேற்று குறிப்பிடுகையில், ‘‘கடத்தல்காரர்களின் மிருகத்தனமான செயலுக்கு கனடா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இது ஒரு தேவையற்ற மரணம். அவரை கடத்தி சென்ற தீவிரவாத குழுதான் இந்த படுகொலைக்கு பொறுப்பு’’ என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ இந்த படுகொலை தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசுடனும், சர்வதேச கூட்டாளிகளுடனும் கலந்து பேசி செயல்படுவோம்’’ என்றார்.

ஜான் ரிட்ஸ்டெல் பணியாற்றிய நிறுவனத்தின் அதிபர், ‘‘ இந்த படுகொலை சம்பவம் எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இதை நம்ப முடியவில்லை. துயரத்தில் தவிக்கிறோம்’’ என குறிப்பிட்டார்.

கனடா, எந்த நிலையிலும் யாருக்கும் பணயத்தொகை கொடுப்பதில்லை என்ற கொள்கையை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது

Related posts: