பிரெக்சிட் விவகாரம்: மேலும் தாமதப்படுத்த தீர்மானம் !

Friday, April 12th, 2019

பிரெக்சிட் நடவடிக்கைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு பிற்போடுவதற்கான அங்கீகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் வழங்கி இருக்கின்றனர்.

ப்ரசல்சில் இதுதொடர்பாக இடம்பெற்ற ஐந்து மணி நேர நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பிரெக்சிட்டுக்கான புதிய இறுதி திகதியாக ஒக்டோபர் 31 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றாலும், அதுதொடர்பான ஒப்பந்தம் பிரித்தானிய நாடாளுமன்றில் வெற்றிபெறவில்லை.

இந்தநிலையில் ஜுன் மாதம் வரையில் காலநீடிப்பு வழங்குமாறு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களிடத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

ஐரோப்பிய பேரவையின் தலைவர் டொனால்ட் டஸ்க், இந்த கூட்டத்தை அடுத்து உரையாற்றும் போது, கால நீடிப்பின் ஊடாக வழங்கப்பட்ட அவகாசத்தை வீணடிக்க வேண்டாம் என்று பிரித்தானிய நண்பர்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.