பிரித்தானியாவின் புதிய பிரதமராகின்றார்  தெரசா மே!

Tuesday, July 12th, 2016

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்க உள்ளார்.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார்.

இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய 2 பேர் இருந்தனர். இதில் நேற்று திடீர் திருப்பமாக ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும் என்று கன்சர்வேடிவ் கட்சிக்குழு தலைவர் கிரஹாம் பிராடி அறிவித்தார்.

இந்தநிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பதவி விலகுகிறார். அன்றே தெரசா புதிய பிரதமராக பதவி ஏற்கிறார். 59 வயதான தெரசா இங்கிலாந்தின் 2–வது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன்பு மார்க்கரெட் தாட்சர் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.


ஒலிம்பிக் டிக்கெட் மோசடி:  கைதான அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள்!
இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்!
பேஸ்புக் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு!
காவிரி விவகாரம்: மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் குறித்த தீர்ப்பு இன்று?
ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 27 பேர் பலி!