பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Wednesday, March 16th, 2016

பிரசெல்ஸில் பொலிசார் நடத்திய தீவிரவாத தடுப்பு சோதனையில் பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பெல்ஜியம் நாட்டின் பொலிசார் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். அவர்களுடன் பிரான்ஸ் பொலிசாரும் இருந்துள்ளனர்.

அதிகாரிகளில் ஒருவர் கதவை தட்டியபோது தீவிரவாதிகள் உள்ளிருந்து துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பொலிசாரும் தாக்க தொடங்கினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பொலிசார் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது

மேலும் இருவர் வீட்டுக்குள் மறைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் காரணமாக அங்குள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே இருக்கும்படி பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்