பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்துமாறு பங்களாதேஷ் கோரிக்கை!

Saturday, September 23rd, 2017

ரொஹிங்யா முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மியன்மாரில் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்துமாறு பங்களாதேஸ் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் 72ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அவர், நேற்றைய தினம் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மியன்மாரில் ரகைன் பகுதியில் ரொஹிங்யா முஸ்லீம்களுக்கு எதிராக தொடர் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் பங்களாதேஸில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த வன்முறைகளை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது.எனினும் இது தொடர்பில் கருதர்து வெளியிட்டுள்ள மியன்மார் அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிராகவே தாக்குதல்கள் முன்னெடுக்கப்படடு வருவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் இது தொடர்பில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த பங்களாதேஷ் பிரதமர், மியன்மாரிலிருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் 8 லட்சம் ரொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குறித்த மக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டியதுடன், அவர்கள் அங்கு கண்ணியமாக நடத்தப்படுவதையும் மியன்மார் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மியன்மார் வன்முறையையும், இன அழிப்பு நடைமுறையையும் நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவர்,  மியன்மாரில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் ஐ.நா.வினால் விசாரணைக்குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் மியன்மாரில் பாதுகாப்பு வலயமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: