பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 70 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள குல்ஷன்-இ-இக்பால் பொது பூங்காவில் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் 70 அதிகமோனோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் விடுமுறை தினம் என்பதால், நேற்று மாலை நேரத்தில், கிறிஸ்தவர்கள் உள்பட ஏராளமானோர் பூங்காவுக்கு திரண்டு வந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள், பூங்காவில் உற்சாகமாக பல்வேறு விளையாட்டு சாதனங்களை பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மாலை நேரத்தில், பூங்காவின் வாகன நிறுத்தும் இடத்தில் மிகவும் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தகவல் அறிந்து, போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக மீட்புப்பணி தொடங்கியது. அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 70 பேர் பலியானதாக பஞ்சாப் மாகாண அமைச்சர் பிலாஸ் யாசின் உறுதிப்படுத்தினார். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, ஒரு மனித வெடிகுண்டு தீவிரவாதி என்று நகர போலீஸ் சூப்பிரண்டு முகமது இக்பால் தெரிவித்தார்.இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. பொதுவாக, இதுபோன்ற தாக்குதல்களை தலீபான் தீவிரவாதிகளோ அல்லது ஐ.எஸ். தீவிரவாதிகளோதான் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ‘டுவிட்டர்‘ சமூக வலைத்தளத்தில், ‘லாகூரில் குண்டு வெடித்ததைப் பற்றி அறிந்தேன். அதை வன்மையாக கண்டிக்கிறேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்‘ என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|