பாகிஸ்தானில் இம்ரான் தலைமையில் கூட்டணி அரசு?

Saturday, July 28th, 2018

நடைபெற்று முடிந்த தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதையடுத்து அவரது தலைமையில் கூட்டணி அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறுதிப் பெரும்பான்மையிவிட குறைவான இடங்களை அவரது கட்சி கைப்பற்றியிருந்தாலும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் அவர் ஆட்சியமைப்பார் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீஃப்-ஏ-இன்சாஃப் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, முந்தைய ஆளும் கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) போன்றவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இம்ரானின் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதையடுத்து, நாட்டு மக்களிடையே வெற்றியுரையாற்றிய இம்ரான் கான், தனது ஆட்சி எவ்வாறு வித்தியாசமானதாக இருக்கும் என விளக்கம் அளித்திருக்கிறார். இந்தச் சூழலில், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத அவர் எவ்வாறு பிரதமர் ஆவார் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள 270 தொகுதிகளில், இம்ரானின் கட்சி 118 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

எனினும், 342 உறுப்பினர்களையுடைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு குறைந்தபட்சம் 172 எம்.பி.க்கள் ஆதரவு இருக்க வேண்டும்.

தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகளின்படி, இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு அடுத்தபடியாக நவாஸ் ஷெரீஃபின் பிஎம்எல்-என் கட்சி 62 தொகுதிகளிலும், முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பிபிபி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஹஃபீஸ் சயீதின் மில்லி முஸ்லிம்’ கட்சி அங்கம் வகிக்கும் முத்தாஹிடா மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணிக்கு (எம்எம்ஏ) 12 இடங்களும், முன்னாள் பஞ்சாப் முதல்வர் பர்வேஸ் இலாஹியின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சிக்கு 5 இடங்களும் கிடைத்துள்ன. சுயேச்சை வேட்பாளர்கள் 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் 342 இடங்களில் 272 இடங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதும், எஞ்சிய 70 இடங்களில் 60 பெண்களும், 10 சிறுபான்மை இனத்தவரும் நியமிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர் மற்றும் நியமன உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே இம்ரான் கானால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

தற்போது 118 தொகுதிகளைக் கைவசம் வைத்துள்ள இம்ரானின் பிடிஐ கட்சிக்கு, சுமார் 37 நியமன உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

பழங்குடியினப் பகுதியைச் சேர்ந்த சில சுயேச்சை உறுப்பினர்கள், இம்ரானுக்கு ஆதரவு தருவது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நவாஸ் ஷெரீஃபின் பிஎம்எல்-என் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

பலூசிஸ்தானைச் சேர்ந்த சிறிய கட்சிகளும் இம்ரானை ஆதரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலத்தை இம்ரான் கானால் பெற முடியும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போதைய சூழலில், வேறு எந்தக் கட்சியாலும் ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை கூட நடத்த முடியாமல் இருப்பதால், பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் அவர்கள்.

Related posts: