பலஸ்தீனரை கொன்ற இஸ்ரேல் இராணுவ வீரர் குற்றவாளி – இஸ்ரேல் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு!

காயமடைந்த பலஸ்தீனர் ஒருவரை சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் எலோர் அஸரியா கொலைக் குற்றவாளி என இஸ்ரேல் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் அவருக்கு மன்னிப்பு வழங்க இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
காயமடைந்து நகர முடியாமல் வீதியில் படுத்துக் கிடந்த 21 வயது அப்துல் பதாஹ் அல் ஷரிப் என்ற பலஸ்தீன இளைஞன் மீதே 19 வயதான அஸரியா துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தார்.
எனினும் அந்த பலஸ்தீனர் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்ததாக இராணுவ வீரர் முன்வைத்த நியாயத்தை நிராகரித்தே இராணுவ நீதிமன்றம் கடந்த புதனன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு இஸ்ரேலியர்களிடையே கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தி இருந்தது. அஸரியா மீதான தண்டனை வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
அந்த இராணுவ வீரருக்கு ஆதரவாக இஸ்ரேலில் பேரணிகள் இடம்பெற்றபோதும், அவரது நடத்தை இஸ்ரேல் இராணுவத்தின் பெறுமானத்தை கொண்டதல்ல என்று உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்புக் குறித்து நெதன்யாகு பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “எலோர் அஸரியாவுக்கு மன்னிப்பு வழங்க நான் ஆதரவளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“எலோர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஏனைய படையினர் மற்றும் எமது படையினரின் பெற்றோர் முதற்கொண்டு எம் அனைவருக்கும் இது கடினமான வருத்தத்திற்குரிய தினமாகும்” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
நீதி விசாரணை இடம்பெற்ற அடிப்படையில் மாத்திரமே பொதுமன்னிப்பு குறித்த விடயத்தை கையாள முடியும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் ஹெப்ரூன் நகரில் கடந்த மார்ச் 24 ஆம் திகதியே இந்த சம்பவம் இடம்பெற்றது.
ஷரிபுடன் மற்றொரு பலஸ்தீன இளைஞரான ரம்சி அசிஸ் அல் கஸ்ராவி இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தினர். அவர்கள் முன் இருந்த படை வீரர் ஒருவர் பலஸ்தீனர்கள் மீது சூடு நடத்தியதில் கஸ்ராவி கொல்லப்பட்டதோடு ஷரிபுக்கு காயம் ஏற்பட்டது.
அப்போது ஷரிப் காயமடைந்து வீதியில் நகர முடியாமல் நிராயுதபாணியாக இருக்கும் காட்சியை பலஸ்தீனர் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான பிட்செலமினால் வெளியிடப்பட்டது.
இதன்போது அஸரியா என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய படை வீரர் அங்கு வந்து ஷரிபின் தலையில் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அரச வழக்கறிஞர்களின் குற்றப்பத்திரத்தில், அஸரியா, எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் காயமடைந்து தரையில் கிடப்பவர் மீது அச்சுறுத்தல் கொண்டவர் என நியாயப்படுத்தி சட்டத்தை மீறி இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. ஆட்கொலை குற்றச்சாட்டுக்கு இஸ்ரேலில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
அஸரியாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கொல்லப்பட்ட ஷரிபின் தந்தை யுஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேல் படையினர் மற்றும் குடியேறிகளின் துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது 244 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஆயுதம் ஏந்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள், பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள், தாக்குதல்தாரி என்று குற்றம்சாட்டப்பட்டவர்களும் அடங்கும்.
Related posts:
|
|