பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளில் தீவிரம் காட்டும் ஜப்பானிய பொலிஸார்

Friday, June 23rd, 2017

ஜப்பானில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் ஜப்பானிய பொலிஸார் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டோக்கியோ சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜப்பானிய வங்கி ஆகிய இடங்களில் நேற்று (புதன்கிழமை) மேற்படி பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒலிம்பிக் போட்டி மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேற்படி இரண்டு பயிற்சி நடவடிக்கைகளும் ஒரே நாளில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜப்பான் மத்திய வங்கியில் இடம்பெற்ற  பயிற்சி நடவடிக்கையில் ஊழியர்கள் மற்றும் பொலிஸார் என 40 பேர் பங்கேற்றிருந்தனர். மத்தியவங்கியில் வெடிகுண்டு வைப்பதற்கு பயங்கரவாதிகள் முயற்சிப்பது போன்றும் பொலிஸார் வெடிகுண்டை அகற்றுவதற்காக பெருநகர பொலிஸ் பிரிவின் வெடிகுண்டு அகற்றும் படையினருக்கு அழைப்பு விடுப்பதுடன் தாக்குதல்தாரிகளை கைது செய்வது போன்றும் பயிற்சிகள் இடம்பெற்றன.

இதேபோன்ற பயிற்சியே டோக்கியோ விமான நிலையத்திலும் முன்னெடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் இடம்பெற்ற பயிற்சியில் பொலிஸார், விமான நிலைய அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் என 180 பேர் வரையில் பங்கேற்றிருந்தனர். விமான நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்படுவது போன்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நடப்பாண்டில் குறித்த விமான நிலையத்தில் இடம்பெறும் மிகப்பெரியளவிலான பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: