படையினரை கன்னத்தில் அறைந்த பாலஸ்தீன சிறுமி விடுதலை!

Tuesday, July 31st, 2018

இஸ்ரேல் படையினரை கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் சிறைதண்டனை பெற்ற பாலஸ்தீன சிறுமி அகட் தமிமி (17) சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இஸ்ரேல் இராணுவத்தினரை கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின் பேரில் பாலஸ்தீன சிறுமி தமிமி மற்றும் அவரது தாயாருக்கு எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தண்டனை முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் .

விடுதலை செய்யப்பட்டவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரைப் பகுதியில் உள்ள பாலஸ்தீன நகரான துல்கர்முக்கு கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ரான்டிஸ் பகுதி வழியாக அவர்களது சொந்த கிராமமான நபி சலேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் தனது ராணுவ அடக்குமுறை மூலம் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு, பாலஸ்தீன மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் தமிமி வீட்டின் அருகில் இருந்த இஸ்ரேல் இராணுவ வீரர்கள் அவரது உறவினரை தாக்கினர். இதைக்கண்ட 17 வயதான தமிமி இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர், வீரர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தும், உதைத்தும் பதிலடி கொடுத்தார். இந்த சம்பவத்தை தமிமியின் தாயார் விடியோ பதிவு செய்து முகநூலில் வெளியிட்டார். இது பாலஸ்தீன மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸி அந்தச் சிறுமியின் தீரச் செயலை பெரிதும் பாராட்டினார்.

ஆனால், இஸ்ரேல் இராணுவம் தமிமியை கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கும், அவரது தாயாருக்கும் இஸ்ரேல் ராணுவ நீதிமன்றம் எட்டு மாத சிறை தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்த நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: