‘நோபல்’ பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நைபால் காலமானார்!

Monday, August 13th, 2018

இலக்கியத்துக்கான, ‘நோபல்’ பரிசு பெற்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், வி.எஸ்.நைபால், 85,லண்டனில், நேற்று காலமானார்.

கரீபியன் தீவில் ஒன்றான, டிரினிடாட்டில், 1932ல் பிறந்த, வி.எஸ்.நைபாலின் முழுப்பெயர், விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால்.இவரது தந்தை, சீபிரசாத் நைபாலின் பெற்றோர், இந்தியாவில் இருந்து,டிரினிடாட்டுக்கு குடியேறியவர்கள்.பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஆங்கில இலக்கியம் படித்த நைபால், 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிஉள்ளார்.

கடந்த, 1971ல், ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்காக, அவருக்கு, ‘புக்கர்’ விருது வழங்கப்பட்டது.மேலும், ‘ஏ ஹவுஸ் பார்மிஸ்டர் பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக, 2001ல், அவருக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சமீபகாலமாக, நைபால், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று, ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள வீட்டில், நைபால் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.நைபாலின் மறை வுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

நைபாலின் மறைவுக்கு, சர்வதேச அளவில், பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.நைபால், கடுமையான விமர்சன கட்டுரைகளை எழுதுவதில், பிரசித்தி பெற்றவர்.பிரிட்டன் முன்னாள் பிரதமர், டோனி பிளேரை, ‘கடற் கொள்ளையன்’ என, விமர்சித்து, சர்ச்சையை ஏற்படுத்தியவர்.