நெருக்கடியால் திணறும் இலங்கை – அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய மத்திய அரசு முடிவு!
Monday, July 18th, 2022திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விடுத்த கோரிக்கையை அடுத்து இலங்கையின் நிலைமை குறித்து நாளை செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.
மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் “இலங்கையின் தற்போதைய நிலைமை” குறித்து அவர்களுக்கு விளக்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசின் இந்த முடிவை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தீவு நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் செய்வது குறித்து கடிதம் எழுதியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்தியா தலையிட வேண்டும் என்று மக்களவையில் திமுக தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான, லோக்சபா முன்னாள் துணை சபாநாயகருமான எம்.தம்பிதுரையும், இலங்கையில் நிலவும் நெருக்கடியை தீர்க்க நாடு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கி வருவதாக சமீபத்தில் திரு மோடி சென்னையில் கூறியிருந்தார். மேலும் நிதி உதவி, எரிபொருள், உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் இதில் அடங்கும்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
திரு. மோடியுடனான சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவ தனது அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவலை திரு.ஸ்டாலின் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரு.ஸ்டாலினின் இந்த செயலுக்கு “நாட்டின் நெருக்கடியை வேறொரு நாட்டைப் பற்றிய பிரச்சினையாகக் கருதாமல், மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்த்ததற்காக, இலங்கை மக்கள் சார்பாக உங்களுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திரு. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|