நெதன்யாகு மீது குற்றச்சாட்டு பதிவதற்கு பொலிஸ் பரிந்துரை!

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தொடர்பில் பல மாதங்கள் இடம்பெற்ற இரு ஊழல் விசாரணையை அடுத்து இஸ்ரேலிய பொலிஸ் அவர் மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகளை பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகள் தற்போது சட்டமா அதிபரிடம் சென்றிருப்பதோடு நெதன்யாகு மீது வழக்கு தொடுப்பது குறித்து அவர் தீர்மானிக்கவுள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தொலைக்காட்சியில் நேரடியாக உரையாற்றிய நெதன்யாகு இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்று குறிப்பிட்ட அவர் தொடர்ந்து பதவியில் இருக்கப்போவதாக உறுதி அளித்தார்.
இதில் அரசியலில் சாதகமான முடிவுக்காக செல்வந்த வர்த்தகர் ஒருவரிடம் பெறுமதி மிக்க பரிசை பெற்றுக்கொண்டதான சந்தேகத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதேபோன்று தம்மீதான சாதகமான செய்திகளை வெளியிடுவதற்கு தனியார் பத்திரிகையுடன் உடன்பட்டதாக அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது.
ஹொலிவுட்டைச் சேர்ந்த மொகல் ஆனன் மில்ஷன் மற்றும் பிற ஆதரவாளர்களிடமிருந்து மில்லியன் டொலர்கள் மதிப்பிலான பரிசுப் பொருட்களை நெதன்யாகு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடங்களில், குறைந்தது 15 விசாரணைகளை தான் சந்தித்திருப்பதாகவும், அனைத்தும் ஒன்றுமில்லாமல் முடிந்திருக்கிறது இதுவும் அதுபோன்றே முடியும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
68 வயதான நெதன்யாகு தற்போது தனது இரண்டாவது தவணைக்கு தொடர்ந்து பிரதமர் பதவியை வகித்து வருகிறார். அவர் மொத்தம் 12 ஆண்டுகள் இஸ்ரேல் பிரதமராக இருந்துள்ளார்.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்காக எந்த ஒரு பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டிய தேவை இல்லை என்று இஸ்ரேல் நீதி அமைச்சர் அயெலெட் ஷகெட் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
Related posts:
|
|