நிர்ணயிக்கப்பட்ட கால அளவை தாண்டி பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை?

Wednesday, December 28th, 2016

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் வைப்புசெய்வதற்கான கால அளவை நிர்ணயிப்பது குறித்தஅவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான அவசரச் சட்டம் ஒன்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அவசர சட்டத்தின் படி, மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பத்து பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மேல் வைத்திருந்தால், இந்த தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த அவசரச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்பதலைப் பெறுவதற்காக அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

கையிருப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள், அதன் பின், ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட சில கிளைகளில் இந்த நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும். அவ்வாறு மாற்றுவது மார்ச் 31-ஆம் தேதி வரைதான் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பதற்கு தண்டனை என்ற உத்தரவு, டிசம்பர் 30-க்குப் பிறகு நடைமுறைக்கு வருமா அல்லது மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு நடைமுறைக்கு வருமா என்பது குறித்த தெளிவான உத்தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.

_93155702_fffffff