நாடாளுமன்றத்துக்கே கூடுதல் அதிகாரம்: பிரித்தானிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

Wednesday, January 25th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக கடந்த ஆண்டு யூன் மாதம் அந்த நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர்.

இந்த விவகாரத்தால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே கடந்த யூலை மாதம் பதவியேற்றார். வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முழுமையாக வெளியேறிவிடும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறக்கூடாது, பிரெக்ஸிட் நடவடிக்கையை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி பெண் தொழிலதிபர் ஜினா மில்லர் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் 8 நீதிபதிகள், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். 3 இதர நீதிபதிகள், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினர்.

பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தற்போது வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றது

supremecourtpa-720x405