நாடாளுமன்றத்தில் கலைஞரக்கு இரங்கல்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Thursday, August 9th, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் மீதுள்ள கொடி கம்பத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற எம்.பி.யாக இருப்போர் உயிரிழக்கும்போது மட்டுமே, அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரு அவைகளும் ஒத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், நாடாளுமன்ற அலுவல் புதன்கிழமை தொடங்குவதற்கு முன்பு, மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, பிற கட்சிகளின் மூத்தத் தலைவர்களுடன் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரு அவைகளையும் ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது கருணாநிதி, தற்போது எம்.பி.யாகவும் இல்லை, அதேபோல் அவர் முன்னாள் எம்.பி.யும் கிடையாது என்றும், இந்நிலையில், அவையை ஒத்திவைக்கலாமா? என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் வெங்கய்ய நாயுடு கருத்து கேட்டார்.

இதற்கு வெங்கய்ய நாயுடுவிடம், நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர், ஆதலால் அவருக்கு இரங்கல் தெரிவித்து அவையை ஒத்திவைக்கலாம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பதில் அளித்தனர்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரும், அவையை ஒத்தி வைப்பதை மத்திய அரசும் ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.

இவர்களின் கருத்து, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடமும் எடுத்துரைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மக்களவை புதன்கிழமை காலை தொடங்கியதும், கருணாநிதியின் மறைவு குறித்து உறுப்பினர்களிடம் சுமித்ரா மகாஜன் எடுத்துரைத்தார். பின்னர் கருணாநிதிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு, மக்களவையை நாள் முழுவதும் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கருணாநிதிக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார். அப்போது அவர், கருணாநிதியை பன்முகத் தன்மை கொண்டவர் என்றும், வாழ்க்கையில் தொடர் பிரச்னைகளை எதிர்கொண்டு தலைவராக உயர்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

இதைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, மாநிலங்களவையை நாள் முழுவதும் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.

இதேபோல், நாடாளுமன்ற எம்.பி.யாகவோ, அல்லது முன்னாள் எம்.பி.யாகவோ இல்லாத ஒருவருக்கு இரங்கல் தெரிவித்து, இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று நாடாளுமன்ற அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Related posts: