நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது!

Sunday, April 10th, 2022

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த, நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடியது.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனிடையே எதிர்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினர். இதில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார். அதாவது, 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற அவையில், இம்ரான் கானின் ஆட்சி தொடர 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்து, பிரதமர் அரியணையில் இருந்து அவர் அகற்றப்பட்டார்.

இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு இம்ரான்கான் ஆளாகியுள்ளார்.

வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன், விமான நிலையங்களில் ராணுவ கட்டுப்பாடு, நாடாளுமன்றம் முன்பு இம்ரான் கானின் தொண்டர்கள் குவிந்தது என பாகிஸ்தானின் நள்ளிரவு பதற்றம் நிறைந்தே காணப்பட்டன.

வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பை எதிர்கட்சிகள் தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

000

Related posts: