தென்கொரிய பாராளுமன்ற தேர்தல் : ஆளுங்கட்சி அதிர்ச்சி தோல்வி

Friday, April 15th, 2016

தென் கொரிய பாராளுமன்றத்தில் மொத்தம் 300 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 253 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் மீதி 47 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதன்படி 253 இடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 58 சதவீதம் வாக்ககள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.8 சதவீதம் அதிகம்.

முடிவில் அதிபர் பார்க் கியுன் ஹையின் பழமைவாத செனூரி கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சியான கொரிய மிஞ்சூ கட்சி 123 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. ஆளும் பழமைவாத செனூரி கட்சிக்கு 122 இடங்கள் கிடைத்தன.

இதன்மூலம் நாட்டின் முதல் கட்சியாக எதிர்க்கட்சியான மிஞ்சூ கட்சி வந்துள்ளது. அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்து புதிதாக உருவான மக்கள் கட்சி 38 இடங்களை கைப்பற்றி உள்ளது.

நீதி கட்சிக்கு 6 இடங்கள் கிடைத்துள்ளன. சுயேச்சையாக போட்டியிட்டு 13 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஆளுங்கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன என்பதுபற்றி அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “அதிபர் பார்க் சர்வாதிகார முறையில் செயல்பட்டுவந்ததால், பழமைவாத வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்து, தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, எதிர்க்கட்சிகளுக்கு வாக்கு போட்டு உள்ளனர்” என்றனர்.

இந்த தோல்வி மூலம் 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக செனூரி கட்சி, பாராளுமன்றத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து ஆளும் பழமைவாத செனூரி கட்சி தலைவர் கிம் மூ சங் பதவி விலக முன் வந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி கண்டுள்ள தோல்விக்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். நான் பதவி விலகுவேன்” என்றார்.

இதேபோன்று தோல்வி குறித்து ஆளும் செனூரி கட்சி செய்தி தொடர்பாளர் ஆன் யுங் ஹவன் கருத்து தெரிவிக்கையில், “தேர்தல் முடிவுகளையும், வாக்காளர்களின் தேர்வையும் செனூரி கட்சி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது. மக்கள் எங்களால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாங்களும் அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள தவறி விட்டோம்” என கூறினார்.

வெற்றி பெற்றுள்ள மிஞ்சூ கட்சி விடுத்துள்ள அறிக்கையில், “அதிபர் பார்க் அரசின் சர்ச்சைக்குரிய பொருளாதார கொள்கைகள் மீது மக்கள் அளித்துள்ள கடுமையான தீர்ப்பு இது” என கூறப்பட்டுள்ளது.

Related posts: