தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது!

Friday, May 25th, 2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியாயினர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு இயல்புநிலையை கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வணிகர்களுடன் அரசு பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். கடைகளை திறக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

இதை ஏற்று, நேற்று மாலையில் வ.உ.சி., சந்தை திறக்கப்பட்டது. காய்கறி வரத்து குறைவாக இருந்ததால், ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. இதனால், காய்கறி விலை அதிகளவில் இருந்தது. இன்று சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய நகரங்களில் இருந்து காய்கறி வந்துள்ளதால், இயல்பான விலையில் விற்கப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதியளவு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நகரில், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. அண்ணாநகரின் 12 தெருக்களிலும், கிரேஸ்புரம், மட்டக்கடை, போல்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பதற்றம் நிலவுவதால், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மேலும் 48 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து 60 பஸ்கள் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிமனையில் இருந்து 40 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களுக்கு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அதிகாரிகளும் போலீசாரும் அரசு பஸ்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தின் வணிகப்பகுதியான ஏரலுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓரளவு பயணிகளம் வரத்துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 12 பேரை வடபாகம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைதான 65 பேர் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 68 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.